" பிறர் நம்மிடம் எந்த வேஷத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதையறிந்து அதை அணிவதால் வாழ்கையின் கட்டங்கள் சுமுகமாக கழிகின்றன. என்றாலும் புழுக்கம் தாங்காமல் வேஷங்களை எதிர்த்து திமிறத் தொடங்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது சண்டை வருகிறது..."
தற்பொழுது ஆதவன் அவர்களுடைய சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய அண்ணன் "கண்ணன்" மூலமாக ஆதவன் அறிமுகமானார். ஏன் முக்கால்வாசி எழுத்தாளர்கள் , புத்தகங்கள் எனக்கு அறிமுகபடுதப்பட்டது அவராலே என்று கூட சொல்லலாம்.
நாங்கள் இருவரும் புத்தகங்கள் படிப்பது, பிறகு அவற்றைக் குறித்து ஒரு அழகிய மாலை வேளையில் , வீட்டின் பால்கனியில் நன்றாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு, கோத்தாஸ் காபியின் அரோமாவில் மிதந்து கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வோம். பல புதிய எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களுடைய நேர்த்தி குறித்தும் அளவளாவிக் கொண்டிருப்போம்.
யாரோ கூப்பிடும் சத்தம். கண்விழித்தேன்.
அவரின்பால் இருந்த பயம் காரணமாகவோ இல்லை இறுக்கம் காரணமாகவோ தெரியவில்லை நான் அவரிடம் என் படிப்பு மற்றும் வேலை தவிர வேறேதும் குறித்து விவாதித்ததில்லை. என் பயம் மறைந்து , இறுக்கம் தளர்வதர்க்குள் அவர் பரதேசி ஆகிவிட்டார். ஆம் நான் மேற்கூறிய ஒன்று வெறும் எழுத்து வடிவத்துடனே நின்றுவிட்டது தான் உண்மை. நிற்க.
சில வருடங்களுக்கு முன்பு ஆதவன் அவர்களுடைய "காகிதமலர்கள்" புத்தகத்தை குறித்து எழுதியிருந்தேன். அவருடைய இன்னொரு புத்தகமான "என் பெயர் ராமசேஷன்" னும் கண்ணன் அண்ணாவின் மூலமாக படிக்கும் வாய்ப்பைப்பெற்றேன். அவருடைய காகிதமலர்கள் என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
இந்த வருடம் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்தபொழுது அவரின் மற்ற சில படைப்புகளை தேடிப்பிடித்து வீட்டில் அகப்படுத்த முனைந்தேன். ஆனால் அவருடைய சிறுகதை தொகுப்பு மட்டுமே அகப்பட்டது. கடந்த வாரம் அவரின் "இரவிற்கு பின் வருவது மாலை" புத்தகம் அமேசான் வலைதளத்தில் இருந்து ஆர்டர் செய்து கிடைக்கப்பெற்றேன்.
தற்சமயம் "நான் பர்ஸ் திருடிய நாள்" படித்துக் கொண்டிருக்கிறேன்.
Comments
Post a Comment