ஆதவனின் சிறுகதை தொகுப்பில் எனக்கு பிடித்த சில எழுத்துக்களை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.
இந்த சமூக கட்டமைப்பு குறித்து ,
" இங்கே அறையில் மனது நிச்சலனமாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன் தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள் , சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை. "
பணம் குறித்து ஒரு சிறுகதையில் ,
" பணம் மனிதனுடைய தோற்றத்தையும், மனப்போக்கையும் மிகவும் மாற்றி விடுகிறது. தூய்மை, எளிமை முதலிய மெல்லிய உணர்வுகளின் கூர் மழுங்கச் செய்து விடுகிறது. பணம் சிலவற்றை கொடுப்பதுபோலச் சிலவற்றை எடுத்துக்க் கொண்டும் விடுகிறது. பணம் கொடுக்கிற விஷயங்கள் பணம் எடுத்துக்க் கொள்ளும் விஷயங்களை விட உண்மையில் மதிப்பு வாய்ந்தவைதாமா ? "
நாம் சூழ்நிலைகளின் கைதிகளாய் பல்வேறு வேஷம் தரித்து வாழ்க்கை முழுவதும் உழன்று கொண்டிருப்பதை "கால் வலி" என்ற கதையில் அப்பட்டமாக உணர்த்தும் தருணம் இங்கே ,
" இப்போது யோசிக்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாள் அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே.அவன் அவர்களுக்காகத் தன் இயல்புக்கு மாறான ஒரு வேஷம் அணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வேஷம், எது வேஷமில்லை ? எது அவனுக்கு இயல்பானது ? எது அவனுக்கு இயல்பற்றது ? ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படி எப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம்.
ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாக தோன்றுகிறது. முக்கியமானதாக தோன்றுகிறது. நம்மை இயங்க வைக்கிறது. அப்படி நம்மை இயங்க வைக்கும் ஒவ்வோர் உண்மையையும் இறுதியில் ஒரு நாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம்; வேறு உண்மைகளில், அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில் தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின் , யத்தனங்களின் அடிப்படையே இவ்வகை தோற்றங்கள் தாமே ? பொய்கள் தாமே ? "
"லைட்ஸ் ஆன்" எனும் சிறுகதையில் நம்மீது திணிக்கப்படுகின்ற வேஷங்களைக் குறித்து ,
" பஸ் ஸ்டாண்டில், எனக்கு எதிர் ப்ளாக்கில் வசித்த கிழவர் நின்று கொண்டிருக்கிறார். என்னைப் பார்த்தும் விட்டார். புன்னகை. ரொம்ப நேரமா நிற்கிறீர்களா ? ராட்டன் பஸ் சர்வீஸ் , இத்யாதி. முதல் சந்திப்பில் மாறுபடுகிற , கோபமுள்ள இளைஞனாக என்னைக் காட்டிக் கொள்ளாமல், மரபுகளுடன் , அவர் நம்பிய உண்மைகளுடன் என்னைக் காட்டிக் கொண்டதன் பலனை அதன் பிறகு அவரை சந்திக்கும் போதெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் . சில வேடங்களை நாமாக அணிகிறோம். சில , நம்மீது திணிக்கப்படுகின்றன. "
இன்னும் பல இருக்கிறது. அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
Comments
Post a Comment