நான் ஆதவன் அவர்களின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டு சிலகாலம் ஆகிவிட்டது. அவரின் எழுத்து நடை, அணுகுமுறை , சொல்லும் விதம் , உவமைகள், எக்ஸ்ப்ரெசென்ஸ் மற்றும் இந்த சமூக கட்டமைப்பின் மீதுள்ள அவரின் பார்வை, அவரின் கதாபாத்திர சிருஷ்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அவரின் படைப்புகள் முற்றிலும் மனிதர்கள் குறித்தும், மனிதர்களின் உள்ளுணர்வுகள் குறித்தும், மனித மனங்களில் எழும் சுய கேள்விகள், சமூக கட்டமைப்பு, அவற்றின்பால் நம்முடைய சலிப்பு முதலியனவற்றைக் குறித்தும் தான். அவரின் கதாபாத்திரங்கள் எதையும் சட்டென்று ஊகிக்காமல் , பல கேள்விகளுக்கு தம்மை உள்ளக்கி கொள்ளுவதும், அவற்றில் காணப்படும் ஒரு வித நிதானம் அவருடைய எழுத்திலும் பிரதிபலிக்கும்.
டில்லி, அரசு வேலை , மிடில் கிளாஸ், சமூகம் , அதற்காக நாம் அணியும் பலவித வேஷம், எல்லாவற்றிலும் உள்ள சலிப்பு , நாம் நமக்காக அல்லாமல் பிறர்க்காக என்பதை நம்மில் திணிக்கும் இந்த அமைப்பு ஆகியனவற்றின் ஆக்கிரமிப்பு பெருமளவில் தென்படும்.குறிப்பாக அவரின் எழுத்துக்கள், இந்த சமூக அமைப்புகளைக் குறித்த அவர் பார்வை , பெரிதும் இவ்வாறே அமைந்திருக்கும்.
" நாம் பயன்படுத்தப்படாமல் நம்மால் பயன்படுத்தக்கூடிய ஒரு அமைப்பையே நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம் ".
கவித்துவமோ , எதுகை மோனையோ , கிராமத்து காவியமோ , வறுமை , பசி , வஞ்சகம், மனித உறவுகள் குறித்தோ படிப்பதானால் , பெரும்பாலும் எனக்கு ஏற்படுவது ஒரு வித நோஸ்டால்ஜியா , ஒரு வித அபரிமிதமான உணர்ச்சியின் வெளிப்பாடு , ஒரு வித மனக்கிளர்ச்சி , மன அமைதி , ஒரு ஆத்மா திருப்தி அவ்வளவுதான். இவையனைத்தும் தற்காலிகமானவை. எளிதில் மறக்ககூடியவை.
ஆனால் ஆதவனின் எழுத்துக்கள் என்னை சிந்திக்க வைக்கிறது. மனதில் பல கேள்விகளை எழுப்புவதோடில்லாமல், என்னுள் , என்னால் அணியப்படுகின்ற பல வேஷங்களை , பலவித ஆடைகளை அவிழ்த்தெறிந்து என்னை நிர்வாணப்படுத்துகிறது. என்னை எனக்கே காட்டிக் கொடுக்கின்ற ஒரு கண்ணாடியாய் திகழ்கிறது.
நான் சார்ந்த சூழ்நிலைகளின் அடிமையாகவே என்னை நான் காண்கிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ளும் சமூகத்தின்பால் எனக்கு சலிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.
Comments
Post a Comment